Sunday, October 26, 2014

அரசாங்கத்திலிருந்து பல்டி அடிக்க தயாராகுவோரை தடுத்துநிறுத்தும் சஜித் பிரேமதாஸா - சிங்கள ஊடகம்

ஐ.தே.க.வில் இணைந்து கொள்ள தயாராக உள்ள ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களை தடுக்கும் முயற்சியில் சஜித் பிரேமதாச ஈடுபட்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் ஆளுங்கட்சியுடன் அதிருப்தியில் உள்ள முக்கியஸ்தர்களைத் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாளைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் எண்ணத்தில் இருந்த வசந்த சேனநாயக்கவை கடந்த வெள்ளிக்கிழமை சஜித் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

அதன்போது வசந்த சேனநாயக்க ஐ.தே.க. வில் இணையவுள்ள தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட பின், அவ்வாறு கட்சி மாற வேண்டாம் என்று சஜித் கடுமையாக அறிவுரை கூறியுள்ளார்.

“ரணிலை நம்பி எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அவர் நம்பிக்கைத் துரோகி. சொன்னதைச் செய்யமாட்டார். 2001ம் ஆண்டு அரசியல் மாற்றத்துக்குக் காரணமாக இருந்த எஸ்.பி.திசாநாயக்க மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை ஆட்சிக்கு வந்த பின் உதாசீனப்படுத்தி விட்டார். அவர்கள் அரசியல் அநாதைகளாக மீண்டும் சுதந்திரக் கட்சியில் சரணாகதி அடைய நேர்ந்தது.

உங்களுக்கும் அவர் என்னதான் வாக்குறுதிகள் அளித்தாலும் ஆட்சிக்கு வந்தால் அவற்றை மறந்துவிடுவார். நன்றாக தீர்மானித்து முடிவெடுங்கள். அரசியல் எதிர்காலத்தை நாசமாக்கிக் கொள்ளாதீர்கள்” என்று நீண்ட நேரம் சஜித் அறிவுரை கூறியுள்ளார்.

சஜித்தின் அறிவுரை காரணமாக நாளைய தினம் வசந்தவின் கட்சிதாவல் நடைபெறாது என்று நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

கட்சி தாவும் தனது முடிவை அவர் தற்போது மீள்பரிசீலனை செய்து கொண்டிருப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என அவ்வூடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment