(சத்தார் எம் ஜாவித்)
இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக நிலவிய கொடிய யுத்தத்தின் வடுக்களில் ஒன்றுதான் வடமாகாண முஸ்லிம்கள். 1990ஆம் ஆண்டு இதேபோன்றதொரு ஒக்டோபர் மாதத்தின் இறுதிக் கட்டத்தில் கனவிலும் நினைத்திராத ஒரு பாரிய துர்ப்பாக்கிய சம்பவம்தான் வடமாகாண முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் இரண்டு மணி நேரத்தில் விரட்டப்பட்டமையாகும்.
முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே வடமாகாணத்தையே விட்டு உடுத்திய உடுப்புடன் விரட்டப்பட்ட ஒரு சமுகமாக வடமாகாண முஸ்லிம்கள் இன்று இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர்.
யுத்த வடுக்கள் என்பது சாதாரண விடயமல்ல அதன் அகோரமும் தாக்கமும் அதனை அனுபவித்த ஒவ்வொரு மனிதனதும் உள, உணர்வுகளை முழுமையாக காவு கொள்ளும் ஒன்றென்றால் அதற்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. குறிப்பாக யுத்த வடுக்கலாக மரணம், அங்கவீனம், ஆள்கடத்தல்கள், காணாமல்போதல், குடும்ப உறுப்பினர்களை இழத்தல், அகதிகளாகுதல், உடமைகள் அழிதல் என பல்வேறு வகைகளில் அமைகின்றன.
இந்த வகையில்தான் தமது சமுகத்தை பாதுகாக்கின்றோம் என்றும் தமது உரிமைகளை வென்றெடுக்கப் போகின்றோம் என்ற விடுதலைப் புலிகளின் என்னத்தின் பிரதிபலிப்பு தமது பூர்வீகங்களில் இருந்து முற்றாகவே விரட்டப்பட்ட ஒரு சமுகமாக ஒருவருடம், இரண்டு வருடமல்ல 24 வருடங்களை பல்வேறுபட்ட துன்ப துயரங்கள், மேடுபள்ளங்கள், மழை, வெயில் என பல துன்பியல் வாழ்வுக்கு உள்வாங்கப்பட்ட சமுகமாக முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றனர்.
காலாகாலமாக தாமும் தமது பாடும் என தமிழ் மக்களுடன் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கும்போல் வாழ்ந்த சமுகங்கள் யுத்தம் எனும் அரக்கனால் சிதறிச் சின்னா பின்மாக்கப்பட்ட சமுகங்களாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தஞ்சமடைந்து நாடு மற்றும் தேசமற்ற நிலைமைகளையே யுத்தம் ஏற்படுத்தி விட்டது.
எனினும் வடமாகாண முஸ்லிம் மக்களைப் பொருத்தவரையில் தமது பூர்வீகத்தையும், உடமைகளையும் இழந்தாலும் வடமாகாணத்திற்கு வெளியேயே உள்நாட்டு இடம்பெயர்வு மூலம் தென்பகுதியில் பல்வேறுபட்ட மாவட்டங்களில் இன்று வரை சொந்த இடங்களுக்குச் சென்று தமது பூர்வீகங்களில் வாழ முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் பாரிய மன உழைச்சல்களுடன் வாழ்ந்து வரும் துர்ப்பாக்கிய நிலைமைகளே இன்றுள்ள கள நிலவரங்களாகும்.
வடமாகாண முஸ்லிம்களைப் பொருத்த வரையில் தமது வடமாகாண பூர்வீகங்களில் மீளக் குடியமர்வதற்கு பல காரணிகள் தடையாக இருப்பதானால் இரண்டுங் கெட்டான் நிலையில் அவர்கள் தமது மீள் குடியேற்றத்தில் நாட்ட மற்றவர்களாகவும் வெறுப்புடையவர்களாகவும் இருக்கும் தர்ம சங்கடமான நிலைமைகளிலேயே வாழ்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
குறிப்பாக மீள் குடியமர தாம் வாழ்ந்த பகுதிகளில் வீடுகள் இல்லாத நிலைமைகள். கடந்த 1990ஆம் ஆண்டின் இடம் பெயர்விற்குப் பிறகு முழு முஸ்லிம் சமகங்களினதும் உறை விடங்கள், வர்த்தக நிலையங்கள், தொழில் ஸ்தாபனங்கள் முற்றாக அழிக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் அவை இருந்த இடங்களே தென்படாதளவு காடுகளாகவும். வனாந்தரங்களாகவும் காட்சியளிக்கின்றமை.
மேலும் மீள் குடியமர்வதற்கான திடகாத்திரமானதும், நிரந்தரமானதுமான தூர நோக்குத்திட்டங்கள் சம்பந்தப்பட்டவர்களால் வகுக்கப்படாமையும் அதற்கான ஒரு நியாயமாக செயற்படக் கூடிய குழுக்கள் அல்லது அமைப்புக்களின் ஏற்பாடுகள் இல்லாமை.
முஸ்லிம் சமகத்தை பிரதிநிதிப்படுத்தி வரும் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒற்றுமையற்ற தன்மையில் அவலவர்கள் நினைத்தவாறு பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அக்கறையற்ற நிலையில் இருப்பதுடன் அம்மக்களின் நலன்களில் தமது ஆர்வத்தைக் காட்டாது தத்தமது அரசியல் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்ளும் கைங்கரியங்களில் முனைப்பாக இருத்தல்,
முஸ்லிம் சமுகத்தின் வடக்கில் பறிபோன காணிகள் மற்றும் உடமைகளின் விடயத்தில் முறையான தகவல்களை எடுக்காது அரசியல் செல்வாக்குள்ளவர்களின் விடயத்தில் முன்னுரிமைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலைமைகள்.
தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக நீலிக்கண்ணீர் வடிப்பதும் அதற்காக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் வாக்காளர் பட்டியல்களை மீள் குடியேறாத போதிலும் அவற்றை சொந்த இடங்களில் அதாவது முன்பு வாழ்ந்த இடங்களில் பதிவுகளை மேற்கொள்ள வைத்து அம்மக்களை இரண்டுங் கெட்டான் நிலைக்கு உட்படுத்தி வருதல்.
தேர்தல் காலங்களில் பொய் வாக்குறுதிகளை வழங்கி தேர்தல்களில் வெற்றி பெற்றவுடன் நன்றி மறந்து பெரும்பான்மையான மக்களை நடுத்தெருவில் விட்ட நிலைமைகளின் அனுபவங்கள்.
கடந்த 24 வருடங்களாக அகதி எனும் துன்பியல் வாழ்வில் உள்வாங்கப்பட்ட மக்களுக்கு தாம் இழந்த வற்றை பெற்றுக் கொள்வதற்காக அரசியல் ரீதியாகவோ அல்லத பொருளாதார ரீதியாகவோ எந்தவித ஆக்கபூர்வ நம்பத்தகு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை.
இடம் பெயர்ந்த காலங்களை விட தற்போது அம்மக்களின் தொகை அதிகரித்ததன் வகையில் சரியான கணக்கெடுப்புக்கள் அல்லது உண்மையான புள்ளி விபரங்கள் திரட்டப்படாது குறைவான தகவல்களை வெளியிடல்.
இடம் பெயர்ந்த மக்களை உரிய முறையில் மீள் குடியேற்றுவதற்கான சரியான பொறிமுறைகள் வகுக்கப்படாததுடன் அவர்களுக்கான சரியான வழி காட்டல்களும் இல்லாது விரும்பியவர்களை மீள் குடியமர்த்திய போதிலும் அவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் சென்று அகதிகளாக எதுவித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்வது போன்ற நிலைமைகள்.
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமைகள் சாசனம் மற்றும் அரசா சார்பற்ற நிறுவனங்களின் பொறிமுறைகளுக்கு அமைவாக மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறாமை போன்ற பல விடயங்களில் குறைபாடுகள் காணப்படுவதால் முஸ்லிம் சமுகம் இன்று வரை மீளக் குடியமர்வதில் பாரிய சந்தேகங்களுடன் அகதிகளாகவே வாழ்வதையே காணக் கூடியதாகவுள்ளது.
அன்மையில் வடக்கில் ஜனாதிபதி இடம்பெயர்ந்த மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கிய போதிலும் அவை காணி உறுதிப் பத்திரங்களாகவே உள்ளனவே தவிர வீடுகள் அற்ற நிலங்களுக்கே பெருமளவில் உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறந்த தலைமைத்துவங்களும், சரியான வழி காட்டல்களும் இன்றி அகதி முகாம்களில் முடங்கிக் கிடக்கின்ற நிலைமைகள் அவர்களின் மீள் குடியேற்றத்தில் தடைகாக காணப்படுகின்றன.
இவ்வாறு 24 வருடங்களாக அகதி எனும் துன்பியல் வாழ்வில் தமது வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கும் வடமாகாண மக்களுக்கு அவர்களின் வாழ்வில் ஒளி வீச வேண்டுமானால் அரசாங்கம் தியாக சிந்தனையுடனும் நம்பகத் தன்மைகளுடனும் அரசியல் இலாபங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட தேவையுடைய மக்கள் என்ற வகையில் செயற்பட வேண்டியதே அரசின் கடமையாகும்.
கடந்த 24 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் பல்வேறுபட்ட தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அவையெல்லாம் வடமாகாண முஸ்லிம் மக்கள் விடயத்தில் புஷ்வானமான விடயங்களே தவிர எந்தவிய பயனுள்ள விடயங்களும் அவர்களை சென்றடையவில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களினால் முன் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களாகும்.
அகதிகளாக்கப்பட்ட ஒவ்வொரு விடியற் பொழுதிலும் அம்மக்களின் கனவுகள் எல்லாம் தாம் உரியமுறையில் மீள் குடியேற்றப்படுவோம் என்ற என்னங்களிலேயே விழித்தெழுவர் இவ்வாறு கடந்த 24 வருடங்களையும் வடமாகாண முஸ்லிம் மக்கள் தமது மீள் குடியேற்றக் கனவுகளிலேயே காலத்தைக் கடந்து வந்துள்ளனர்.
ஈற்றில் தற்போது அநாதைகளான அகதிகளாகவே இன்று பரினமித்துக் கொண்டிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வடமாகாண முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றனர். தமது தேவைகளை நாடிச் செல்லும் போதெல்லாம் ஏதாவது ஒருவிதத்தில் பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்த சம்பவங்கள் அம்மக்கள் மனதில் ஆழமாகவே பதிந்துள்ளன.
தற்போது மீள் குடியேறிய மக்களின் வாழ்வியலைப் பார்க்கும்போது அகதிகளாக இருப்பதே சிறந்தது என்ற கொள்கையிலும் கணிசமானளவு மக்கள் காணப்படுகின்றனர். காரணம் அந்தளவிற்கு மீள் குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்தளவில் காணப்படுவதேயாகும்.
உண்மையில் வடக்கில் வீதிகள், மின்சாரம், குளங்கள் புனரமைப்பு, பாலங்கள் புனரமைப்பு, அரச நிறுவனங்கள், வைத்திய சாலைகள் உள்ளிட்ட விடயங்கள் அபிவிருத்தி கண்டாலும் மக்களின் உள்ளகப் பிரச்சினைகள் பல காணப்படுவதால் அவை மேற்படி விடயங்களை மீஞ்சிய குறைபாடுடைய விடயங்களாகவே இன்று அடையாளங் காணப்பட்டுள்ளன.
குறிப்பிட்டளவு மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட போதிலும் அவர்கள் தமது சொந்த இடத்தில் வருடக் கணக்கில் தற்காலிக கூடாதரங்களில் வாழும் நிலைமைகள் மற்றய மக்களை மீள் குடியமர்வதிலிருந்து தூரப்படும் நிலைமைகளைத் தோற்றுவித்துள்ளது. இந்த நிலைமைகள் மாற்றப்பட்டு மக்களின் வாழ்வியல் விடயங்கள் ஏனைய மக்களைப் போன்று சமநிலைப் படுத்தப்படல் வேண்டும்.
அரசின் அபிவிருத்திகள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையிலும், இழப்புக்களுக்கு முகங்கொடுத்தவர்கள் என்ற வகையிலும் ஒவ்வொரு குடும்பங்களினதும் உள்ளார்ந்த விடயங்களில் அரசு முக்கிய கவனஞ் செலுத்தி அபிவிருத்தியின் சமகாலத்தில் அம்மக்களின் முன்னேற்றங்களையும் சம விகிதத்தில் கொண்டு செல்வதே அவசியமாகும். மாறாக பொதுவான அபிவிருத்திகளை முன்னெடுப்பதால் குடும்பங்களின் வருமான விடயங்களில் அபிவிருத்தியையோ அல்லது முன்னேற்றங்களையோ கண்டு கொள்ள முடியாது என்பதே யதார்த்தம்.
தற்போதைய நிலையில் வடமாகாண முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள்தான் வீடுகள் இன்மையாகும். தாம் வாழுவதற்கு வீடுகள் இல்லாத ஒரு நிலையில் எவ்வாறு அம்மக்கள் வாழ்வது? இதற்கு என்ன தீர்வு? போன்ற கேள்விகள் மக்களிடத்தில் இருக்கின்றன. தென்பகுதியில் அரசு அசுர வேகத்தில் புதிய புதிய வீடமைப்புத்திட்டங்களை மேற் கொள்ளும்போது ஏன் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் அவ்வாறானதொரு வீடமைப்புத் திட்டங்களை மேற் கொள்ள முடியாது? என பாதிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்த வகையில் கடந்த 24 வருடங்களாக நாட்டின பல பாகங்களிலும் அகதிகள் என்ற முத்திரையுடன் வாழும் மக்கள் தமது சொந்தப் பூமியில் மீள் குடியேறி சுதந்திரமாகவும், சுயமாகவும் வாழுவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டியது அரசினது தலையாய கடமையாகும்.
எனவே இதுவரை காலமும் இருந்த அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை விடயங்களை கைவிட்டுவிட்டு இலங்கைக் குடிமகன்கள் என்ற நோக்கோடு வடமாகாண முஸ்லிம் அகதிகள் விடயத்தில் அரசு தமது தவறுகளை தொடர்ந்தும் விட்டுக் கொண்டிருக்காது அவர்கள் விடயத்தில் அதிதீவிர முன்னுரிமை கொடுத்து அம்மக்களின் விருப்பங்களை அவர்கள் நினைக்கும் விதத்தில் பூர்த்தி செய்து அகதி வாழ்விற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் எதிர் பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment