மக்களின் விருப்பத்தினை மீறி தமது அதிகாரத்தினை தக்கவைத்துக் கொள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்த சதித்திட்டம் நிறைவேறியிருக்குமாயின் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்திருக்கும். இந்தசதித்திட்டத்தின் பின்னணியைக் கண்டறிய வேண்டும் என தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணி,மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் கால தாமதமாகிவிட்டதெனவும் குறிப்பிட்டது.
மக்கள் விடுதலை முன்னணியினால் பத்தரமுல்லையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மக்களின் விருப்பத்திற்கமைய நாட்டின் தலைவரை தெரிவு செய்து கொள்ளவே ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றது. இம்முறை மக்கள் தமது தலைவரை மாற்றியமைக்க வேண்டும் என்ற நிலையிலேயே வாக்களித்திருந்தனர். எனினும் முன்னாள் ஜனாதிபதி உட்பட அவரின் குடும்பக் கூட்டணி மக்களின் விருப்பத்திற்கு எதிரான அதிகாரத்தினை தக்கவைத்துக் கொள்ளும் சதித்திட்டத்தினையே மேற்கொண்டுள்ளனர். 8 ஆம் திகதி தேர்தலுடன் இராணுவ உதவியுடன் தமது ஆட்சியினை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளும் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதானது மிகவும் மோசமான செயலாகும். இத்திட்டம் தவருதலாகவேனும் நடந்திருந்தால் நாடு மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும்.
ஜனவரி 7 ஆம் திகதியும் 8 ஆம் திகதியும் கொழும்பில் முக்கிய பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டது. இராணுவத்தின் 7 விசேட படைகள் கொழும்பில் இருந்தது. அதே போல் நீர்கொழும்பு விமான நிலையத்தின் அருகேயும் இராணுவம் குவிக்கப்பட்டது. 9 ஆம் திகதி அதிகாலை அலரிமாளியையில் விசேட கலந்துரையாடலொன்றினை ராஜபக்ஷ குடும்பத்தினர் நடத்தியுள்ளனர். பிரதம நீதியரசர் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் இதன் போது கலந்து கொண்டிருக்கின்றனர். ஏன் இப்படியொரு கலந்துரையாடல் நடந்தது தேர்தலுக்கு ஏன் இராணுவம் குவிக்கப்பட்டது. இவர்கள் நினைத்தபடி இராணுவத்தை பயன்படுத்தி சதித்திட்டத்தினை நடத்தியிருந்தால் இன்று நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியிருக்கும். மக்களின் உடல்கள் மட்டுமே நாட்டில் குவிக்கப்பட்டிருக்கும் ஒரு குடும்பத்தின் ஆட்சியினை தக்க வைத்துக்கொள்ள பல உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும்.
எனவே இக்குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது ஆகவே இதன் பின்னணியினை உடனடியாக கண்டறிய வேண்டும். மக்களுக்கு நடந்த உண்மையினை வெளிப்படுத்த வேண்டும். தற்போது இவ் குற்றச்சாட்டுக்களை கண்டறிய பொலிஸ் விசேட பிரிவொன்று விசாரணைகளை நடத்தி வருகின்றது. எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இவ்வாறானதொரு பாரதூரமான குற்றச்சாட்டினை கண்டறிவதில் அரசாங்கம் கால தாமதமாகவே செயற்படுகின்றது.
இராணுவ குற்றங்கள் ஒருபுறம் தொடர்கின்ற நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்வது நாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானது. அதே போல் பிரதம நீதியரசர் இப்போதே பதவிவிலக வேண்டும், நல்லாட்சிப் பாதையில் இந்த நாடு நகரும் போது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய பிரதம நீதியரசர் இன்றும் பதவியில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இந்த ஆட்சியில் ஒரு சிலருக்கு மட்டும் சட்டம் வலைந்து கொடுக்க கூடாது. அப்படியானதொரு வாக்குறுதியினை கொடுத்தே ஜனாதிபதி தெரிவாகியுள்ளார். எனவே கொடுத்த வாக்குறுதியினை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment