கடந்த ஜனாதிபதித் தேர்தலை ஆட்சி மாற்றத்துக்கான ஒரு சந்தர்ப்பமாகக் கருதிநாட்டின் பெரும்பான்மையான மக்கள் மைத்திரிபாலசிரிசேனாவுக்குவாக்களித்துஅவரதுவெற்றியைஉறுதிப்படுத்தினர்.இதில் குறிப்பாகமுஸ்லிம்,தமிழ் சமூகங்கள் தங்கள் வாக்குகளை ஆட்சி மாற்றத்தினை நேரடியாகத் தொட்டுக்காட்டும் வாக்குகளாக அளித்துள்ளனர். இதனை முஸ்லிம் தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் உட்பட, வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத் தேர்தல் முடிவுகள் கோடிட்டுக் காட்டியது.
ஆனாலும் மைத்திரியின் வெற்றிக்கு சிறுபான்மைச் சமூகங்களின் பங்களிப்பு அடிப்படையாக இருந்தது என்பதனைப் பிரச்சாரப்படுத்துவதில் பேரினவாத எண்ணப்பாடுடய சிங்கள மக்கள் மத்தியில் தவறான அரசியல் புரிதல்களை ஏற்படுத்திவிடும் என்கின்ற அச்சம் இருப்பதாகவும் அதனை நாங்கள் பெரிதாக அலங்கரித்துக்கொண்டிருக்காமல் அடக்கமாக வைத்திருக்க வேண்டும் என்றும் முஸ்லிம் அரசியல் சூழலில் கதையாடப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
இதில் மிக முக்கியமாக மைத்திரியின் வெற்றிக்கு சிறுபான்மையினர்தான் நேரடிக் காரணமாக இருந்தனர் என்ற பிரச்சாரம் தொடர்பாக சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கும் கருத்து இவ்வாறான ஒரு அடக்கத்தை முஸ்லிம்கள் கொள்வது நல்லது எனப் பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.
இது தொடர்பாக சம்பிக்க வெளியிட்ட கருத்து வருமாறு.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபாலவின் வெற்றிக்குத் துணையாக இருந்துள்ளன. பொது எதிரணியின் மொத்த வாக்கில் 12 சதவீதம் வாக்கினை இவ்விரு கட்சிகளுகம் பெற்றுக்கொடுத்துள்ளன. அத்துடன் மைத்திரிபாலவின் வெற்றியில் 88 வீதமான பங்களிப்பு சிங்கள மக்களிடம் இருந்தே கிடைக்கப்பெற்றது என்பதை சிறுபான்மை இன மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இனிமேல் சுதந்திரக் கட்சி புத்துயிர் பெறும். தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மலையக தொழிலாளர் கட்சிகள் தமது கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி ஐக்கிய இலங்கை என்ற நீரோட்டத்தில் இணைந்து கொள்வார்கள் என நம்புகின்றோம். (நன்றி : ஜப்னா முஸ்லிம் - 10 ஜனவரி 2015).
மேலே கூறப்பட்டிருக்கும் சம்பிக்க ரணவக்கவின் கருத்தை நாங்கள் அடங்கிப் போகக் கூடிய ஒரு கருத்தாகப் பார்ப்பது ஒரு பக்க நியாயமாக இருந்தாலும். அதன் பின்னால் உள்ள அரிசயல் நோக்குகள் என்ன? இதில் மறைந்திருக்கும் பேரினவாத விளைவுகள் என்ன என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
ஏனெனில் மேலே சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியிருக்கும் விளக்கத்தினை அரச தரப்பில் வேறு யார் குறிப்பிட்டிருந்தாலும் அதன் பின்னால் உள்ள அர்த்தம் சாதாரணமாக இருக்கும் என்று எடுத்துக்கொண்டாலும் இதனை சம்பிக்க குறிப்பிடும் போது அதன் பின்னால் உள்ள அர்த்தங்கள் மிக ஆழமான அறிவுபூர்வமான பேரினவாத உள்நோக்குகளைக் கொண்டதாக இருக்கும் என்பதற்கு பல ஆதாரங்களை கடந்தகால பதிவுகளில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளலாம்.
அதாவது மைத்திரிபாலவின் வெற்றிக்கு சிறுபான்மையினரின் பங்களிப்பு இரண்டாம் பட்சமானது என்ற அர்த்தத்தைக் கற்பிக்கும்வகையில் சம்பிக்க ரணவக்க இக்கருத்தைக் குறிப்பிடும்போது இந்த ஆட்சியிலும் அவர்கள் இரண்டாம் பட்சமானவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அவரது உள் அர்த்தம் காட்டுகிறது என்றுதான் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றிக்குச் சிறுபான்மையினர் பங்களிப்புச் செய்ததைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் அதற்கு மாற்றுக் கருத்தைக் கூறும் இவர்கள் இந்த ஆட்சியின் பங்காளிகளாக முஸ்லிம்களை எப்படி இருந்துவார்கள் என்ற அச்சத்தையும் நாம் எதிர்வு கூற வேண்டி இருக்கிறது.
இதனை மேலும் வலுப்படுத்த சம்பிக்க ரணவக்க கூறிய கருத்தின் அடி வாசகமாக அமைந்த 'தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மலையக தொழிலாளர் கட்சிகள் தமது கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி ஐக்கிய இலங்கை என்ற நீரோட்டத்தில் இணைந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.' என்ற வார்த்தைகளில் சம்பிக்க ரணவக்க இந்த ஆட்சியில் சிறுபான்மை கட்சிகள் எவ்வாறான அனுகுமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு முற்செய்தியை வெளியிட்டிருக்கிறார் என்றுதான் முடிவு கொள்ள வேண்டும்.
எனவே சம்பிக்க ரணவக்கவின் மேற்படி நம்பிக்கை என்பது சிறுபான்மைக் கட்சிகள் தங்களது உரிமைத்துவ, இனத்துவ அரசியலை முன்னெடுத்துக்கொண்டு இந்த ஆட்சியின் பங்காளிகளாக வருகின்ற போது அதற்கான மாற்று நடிவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டி ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிவுறுத்துவதாக அமைகிறது.
சம்பிக்க ரணவக்கவின் இக்கருத்து கண்டிக்கத்தக்கது என உணர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் 01.10.2015 அன்று ரவூப் ஹக்கீமிடம் இதனைச் சுட்டிக்காட்டி 'இந்த வெற்றி slmc / tna கொண்டுவந்ததல்ல, இது சிங்கள பெரும்பான்மை வாக்குகளினால் விளைந்தது என்று சம்பிக்க ரணவக்க சொல்கிறார் இதனை நீங்கள் கண்டிக்க வேண்டும்' என்ற போது அதற்கு புன்முறுவலுடன் ஹக்கீம் : சம்பிக்க சொன்னதில் எந்த தவறுமே இல்லை. இந்த வெற்றிக்கு நாம் வெளிப்படையாக உரிமை கொண்டாடக் கூடாது. ஹெல உறுமயவின் பங்கு இவ்வெற்றியில் பாரிய செல்வாக்கு செலுத்தி உள்ளதை மறைக்க முடியாது, மஹிந்த அரசின் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை மற்ற எவர் சொன்னாலும் சிங்கள மக்கள் கணக்கில் எடுத்திருக்கமாட்டார்கள். அந்த மக்களுக்குள் செல்வாக்குள்ள அவர்களின் ஒரு முக்கிய அரசியல் கட்சியான ஹெல உறுமய அதனைச் சொன்னதனால் மட்டுமே உண்மையை உண்மை என்று விளங்கி மஹிந்தவுக்கு எதிராக சிங்கள மக்களாலும் வக்களிக்க முடிந்திருக்கிறது..... (நன்றி : ரவூப் ஹஸீர் - ஜப்னா முஸ்லிம் 10 ஜனவரி 2015)
இதன்படி மைத்திரியின் வெற்றிக்கான முஸ்லிம்களின் பங்களிப்பினை அடக்கி வாசிக்க வேண்டும் என்று ஹக்கீம் சொல்லிக்கொண்டாலும் அதனை அவர் குறிப்பிட்ட விதத்தில், ஹெல உறுமய சொன்னதால் அதனை சிங்கள மக்கள் கேட்டுக்கொண்டார்கள் என்றும் இந்த ஆட்சியில் ஹெல உறுமய முக்கியமான ஒரு கட்சி என்றும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் மறைமுகமாக உணர வைத்திருக்கிறார். இதனைத்தான் நாம் இதில் ஆழமாக சிந்திக்க வேண்டும். இந்த ஆட்சியின் வெற்றிக்கு மிகவும் பக்கபலமாக இருந்த கட்சி ஜாதிக ஹெல உறுமய ஆகும். அது இந்த ஆட்சியில் தாங்கள் நினைத்த நாட்டை உருவாக்க 19 வது அரசியல் சீர் திருத்தம் என்கின்ற ஒரு அம்சத்தையே வைத்திருக்கிறது. பொது எதிரணிக் கூட்டில் நேரடியாக மைத்திரிபாலவுடன் உடன்படிக்கை செய்த கட்சியாகவும் அது இருக்கிறது. ஏனைய தரப்புக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் உடன்படிக்கையுடன்தான் இணைந்துகொண்டது. ஆனால் ஹெல உறுமய தனக்கான தனியான உடன்படிக்கையை மைத்திரியுடன் நேரடியாகச் செய்து வைத்திருக்கிறது.
மேலும் இப்போது மட்டுமல்ல எப்போதும் நாட்டின் ஆட்சிக்கு சிறுபான்மையினர் பங்களிப்புச் செய்வதனை சம்பிக்க ரணவக்க ஏற்றுக்கொள்ளாதவராகவே இருந்திருக்கிறார். இதற்கு தேர்தல் வருவதற்கு முன்பே அவர் பல இடங்களில் விளக்கம் கூறிய சம்பவங்கள் இருக்கின்றன. நாட்டின் ஆட்சியை முஸ்லிம்கள் தீர்மானிப்பதை ஒரு பேச்சுக்காக பேசினாலும் அதற்கும் அவர் மறுப்புக் கூறுகின்றவராகவே இருந்திருக்கின்றார்.
கடந்த மேல் மற்றும் தென்மாகாணத் தேர்தல் பிரச்சாரங்களின் போது கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, வேலேயகொட பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை 09 ஆம் திகதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது ரவூப் ஹக்கீம் ஒரு பேச்சுக்காக :
பிரேமதாசவை ஜனாதிபதி ஆக்கியவர்கள் நாங்கள். சந்திரிக்காவை ஜனாதிபதி ஆக்கியவர்களும் நாங்கள்தான். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி ஆவதானாலும் அதனை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருப்போம் . இனவாத தீவிரவாத கும்பல்கள் கூச்சல் இடுகின்றன என்பதனால் நாங்கள் அரசாங்கத்தை விட்டு வலிந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் அரசாங்கம் எங்களை வெளியேற்றட்டும். மத்திய அரசாங்கத்திலிருந்து வெளியேறும் போது மாகாண சபைகளின் ஆட்சியிலும் தொடர்பை துண்டித்தக்கொள்ள நேரிடம் அதன் விளைவு என்னவாகும் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். (நன்றி : ஜப்னா முஸ்லிம் - 10 மார்ச் 2014)
இவ்வாறு ஹக்கீம் பிரச்சாரம் செய்ததில் அவர் குறிப்பிடும் இனவாத தீவிரவாத கும்பல்கள் என்று குறிப்பிடும் அமைப்பினுள் ஜாதிக ஹெல உறுமயவும் அடங்குகிறது அதனால்தான் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சம்பிக்க ரணவக்க உடனே அதற்கான மறுப்பினை மருதானையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் இவ்வாறு தெரிவித்தார் :
2016 இல் ஜனாதிபதியைத் தீர்மானிப்பது நாங்கள் என்ற தோரனையில் ஹக்கீம் வீராப்பு பேசி இருக்கிறார். மேலும் கிழக்கு மாகாண ஆதிக்கம் பற்றியும் அவர் பெரிதாக பேசி வருகின்றார். ஹக்கீம் சொல்வது போன்று அவருடைய கட்சியால் தீர்மானம் எடுக்க முடியாது. அப்படி எடுத்தாலும் ரவூப் ஹக்கீமும் இன்னும் ஓரிருவரும்தான் வெளியேறுவார்கள், ஏனையோர் ஜனாதிபதியுடன்தான் இருப்பார்கள். (நன்றி : ஜப்னா முஸ்லிம் 13 மார்ச் 2014)
இப்படி ஒரு பேச்சாகக் கூட ஜனாதிபதியை முஸ்லிம்கள் தீர்மானிப்பதாக பேச முடியாதபடி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே சம்பிக்க ரணவக்க மறுப்புத் தெரிவித்திருக்கிறார் என்றால் இப்போது அவர் சொல்வதில் உள்ள இனவாத எண்ணம் எத்தகையது என்பதை நாம் புரியாமல் இருக்க முடியாது.
மேலும் இதே கருத்தை முன்வைத்து அளுத்கம சம்பவங்களின் பின்னனியில் அரசு இருக்கிறது என்ற ஹக்கீமின் பிரச்சாரத்திற்கும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் அமையும் என்ற வாதத்திற்கும் உரிய விளக்கத்தினை வீரகேசரி பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் சம்பிக்க ரணவக்கவிடம் அப்போது வினவிய போது அதற்கு அவர் அளித்த பதில் 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியென கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' எனும் தலைப்பில் பிரசுரமாகியிருந்தது. அதில் அவர் குறிப்பிடும் கருத்து பின்வருமாறு.
'இந்த நாட்டில் அரசாங்கத்தினை தீர்மானிப்பது பெரும்பான்மை சிங்கள மக்களே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி எனக் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம்களே காரணம் இதற்கு அரசாங்கம் ஒருபோதும் பொறுப்பேற்காது.
இந்த நாட்டின் சிங்கள மக்களே எப்போதும் ஆட்சியைத் தீர்மானித்து வருகின்றனர். அரசாங்கம் என்பதையும் ஜனாதிபதி யார் என்பதையும் தீர்மானிக்கும் சக்தியாக எப்போதும் சிங்கள மக்களே உள்ளனர். இந்நிலையில் முஸ்லிம்களோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ ஆட்சியைத் தீர்மானிக்கின்றனர் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
(நன்றி : ஆர்.யசி – வீரகேசரி, 05 ஆகஸ்ட் 2014)
சம்பிக்க ரணவக்கவின் மேலுள்ள இரண்டு அறிக்கைகளும் முஸ்லிம்கள் ஆட்சியின் பங்காளர்களாக இருப்பதை ஏற்றுக்கொள்ளாத அவரது இனவாத முகத்தை எமக்கு முன்கூட்டிய காட்டி இருக்கிறது. இதன்படி இந்த ஆட்சியின் வெற்றிக்குரிய பங்காளிகளாக முஸ்லிம்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஜாதிக ஹெல உறுமய இவ்வாட்சியில் முஸ்லிம்களுக்கு என்ன பங்கு தரப்போகின்றது என்று அச்சப்படுவது அவசியமானதாக இருக்கிறது. இதன்படி சம்பிக்க ரணவக்கவின் கருத்து கண்டிக்க கூடியது அதனை ஹக்கீம் கண்டிக்காமல் வழக்கம்போல தொடர்பில்லாத நியாயத்தைச் சொல்லி சம்பிக்கவை அவர் நியாயப்படுத்தி இருப்பது வேடிக்கையானது.
இதுபோன்றுதான் கடந்தகால கசப்பான பல அறிக்கைகளையும் நடவடிக்கைகளையும் முஸ்லிம் சமூகம் குறித்து, ஜாதிக ஹெல உறுமயவும் குறிப்பாக சம்பிக்க ரணவக்கவும் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போதுள்ள ஆட்சியில் முக்கிய விடயங்களைத் தீர்மனிக்கும் சக்தியாக இருக்கும் சம்பிக்க ரணவக்க போன்றோர் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் விடயத்தில் எத்தகைய சாதகமான நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பார்கள் என்று அச்சத்தோடு எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது.
இதற்கு முன்உதாரணமாக மாடுகள் வெட்டப்படுகின்றமையை பாதுகாக்கும் செயற்பாடு மைத்திரி யுகத்தில் நடைபெறும் என ஓமல்பே சோபித தேரர் கடந்த செவ்வாய்க்கிழமை 20 ஆம் திகதி அம்பலாந்தோட்டையில் வெட்டுவதற்காக வைத்திருந்த 108 மாடுகளை மீட்டு அவர்களது உரிமையாளர்களிடம் கையளிக்கும் போது குறிப்பிட்டிருக்கிறாh. (நன்றி: ஜப்னா முஸ்லிம் - 21.01.2015)
எனவே ஜாதிக ஹெல உறுமய எப்போதும் தனக்கான நிகழ்ச்சி நிரலை இந்த அரசுக்குள்ளிருந்து நகர்த்தும் என்பதற்கு இது இப்போது ஒரு ஆரம்பமாக இருப்பதை உணரலாம். இதுபோன்ற இன்னும் பல நிகழ்ச்சி நிரல்கள் முஸ்லிம்களின் விடயத்தில் ஜாதிக ஹெல உறுமய கொண்டிருப்பதையும் பின் நாம் விரிவாக குறிப்பிடலாம்.
எனவே இங்கு மைத்திரியின் வெற்றிக்கு முஸ்லிம்கள் செய்த பங்களிப்பினை நாம் பயந்துகொண்டு வெளிப்படுத்தாமல் இருந்தாலும் நமது நிலை இதுதான் அதனை பகிரங்கமாக பேசி அலங்கரித்தாலும் நமது நிலை இதுதான் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் மைத்திரியின் வெற்றிக்கு முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்தாரர்களா? இல்லையா? என்பது அல்ல நமது பிரச்சினை அதற்கு விவாதங்கள் செய்வதும் அர்த்தமற்றது ஆனால் மைத்திரியின் ஆட்சியில் முஸ்லிம்களின் இருப்பிடம் என்ன? அவர்களுக்கான கடந்தகால அடக்குமுறைகளுக்கான தீர்வுகள் என்ன? என்பதுதான் இங்கு ஆராயப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அமைச்சுப் பதவிகள் வழங்குவதனால் இதனை நாம் மதிப்பிட முடியாது.
மைத்திரியின் வெற்றிக்கு சிறுபான்மை வாக்குகள் எவ்வாறு பங்களிப்புச் செய்துள்ளது என்பது மூடி மறைக்க முடியாத ஒன்று அதனை நாம் பேசித்தான் நிரூபிக்க வேண்டும் என்றல்ல அதனை வெளிப்படையாக இந்த நாட்டின் சாதாரண பெரும்பான்மை சிங்கள மக்களும் விளங்கித்தான் வைத்திருக்கிறார்கள். எனவே இதனை ஒரு விடயமாக எடுத்துக்கொண்டு அடக்கி வாசிக்கச் சொல்வதில் எந்தவிதமான சாணக்கியமும் இல்லை.
மறுபுறம் மைத்திரியின் வெற்றிக்கு முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்தார்கள் என்று சொல்வதில் என்ன ஆபத்துக்கள் இருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் ஒரு சிலரைத் தவிர ஏனைய முஸ்லிம் கட்சிகளும் முழுமையாக மைத்திரியுடன் இணைகின்ற போது மஹிந்த வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கு பேராபத்துக்கள் ஏற்படும் எனத் தெரிந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நாங்கள் மஹிந்தவுக்கு எதிராக நிற்கவில்லையா? அதற்கே அஞ்சாத நிலையில் இப்போது நாம் நினைத்த வெற்றி கிடைத்திருப்பதற்கு நாங்களும் காரணம் என்று சொல்வதற்கா அஞ்ச வேண்டும்? அதனை மூடி மறைக்க வேண்டும்?
(தொடரும்)
No comments:
Post a Comment