கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவும் பொறுப்பு சொல்ல வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகவியலாளர் ஒருவருக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச அனைத்து விடயங்களிலும் சர்வாதிகார போக்கினைப் பின்பற்றினார். இதனால் குடும்ப ஆட்சி நிலவி வருவதாக செய்யப்பட்ட பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய சாத்தியங்கள் கிடைக்கவில்லை.
சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென அரசாங்கம் கருதிய போதிலும் பசில் ராஜபக்ச போன்றவர்கள் அதனை தடுத்து நிறுத்தினர்.
வடக்கு கிழக்கு வாக்குகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்தமை மஹிந்த ராஜபக்ச தோல்வியடைய மற்றுமொரு வலுவான காரணியாக அமைந்தது. தேர்தல் மேடைகளில் தாம் ஆற்றிய உரைகள் மஹிந்தவிற்கு எதிராக அமைந்தது என்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமது உரைகளை மலினப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுகின்றது. யாரையும் தனிப்பட்ட ரீதியில் இழிவுபடுத்தும் உத்தேசம் எனக்கு கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையிலான கூட்டணிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பேன் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment