தேர்தல் தினத்துக்கு அடுத்த நாள் காலை இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக தேர்தல் ஒன்றின் முடிவுகள் வந்து கொண்டிருக்கையில் இராணுவ நகர்வு ஒன்றுக்கு முயற்சிக்கப்படவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் முன்னரே முன்னாள் ஜனாதிபதி அலரிமாளிகையை விட்டு வெளியேறி விட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இராணுவப் புரட்சி விடயத்தில் அலரிமாளிகையில் இரகசிய பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக கூறப்படுவது அடிப்படையற்ற கருத்து என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
கோத்தபாய இதுகுறித்து மேலும் கூறுகையில்,
தேர்தல் முடிவுகளையடுத்து, காலையில் அலரி மாளிகையை முற்றுகையிட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே அதிகாலையில் அலரி மாளிகைக்குச் சென்றேன்.
அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்பு கொள்ளப்பட்டது. தாம் உடனடியாக அலரி மாளிகைக்கு வருவதாக அவர் கூறினார்.
அவர் அங்கு வந்ததும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார், அதையடுத்து அலரி மாளிகையை விட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியேறுவதாக முடிவு செய்யப்பட்டது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஏனையவர்களினது பாதுகாப்புக்கு ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.
இது தான் தேர்தல் இறுதி முடிவு வெளியாவதற்கு முன்னர் நடந்தது.
நாம் இராணுவப் புரட்சிக்குத் திட்டமிட்டிருந்தால் எதற்காக, சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்க வேண்டும்?
அவர் அரசாங்கத்துக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குபவர். என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment