Thursday, January 22, 2015

சவூதிஅரேபிய மன்னர் அப்துல்லாஹ் வபாத் - உலகத் தலைவர்கள் அனுதாபம், அடுத்த மன்னராக சல்மான்


சவூதிஅரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் இன்று அதிகாலை காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது  90. 

மன்னர் அப்துல்லாஹ், மருத்துவமனையில் உயிர் நீத்ததாக அந்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

நுரையீரல் நோய் காரணமாக அவர் கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த 2005 இல் மன்னராக பொறுப்பேற்ற அப்துல்லாஹ்,  கடந்த பல வாரங்களாக, நுரையீரல் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை சவூதி நேரப்படி ஒரு மணியளவில் காலமானார் என அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அடுத்த மன்னராக, தற்போது இளவரசராக இருக்கும் சல்மான் பின் அப்துல்அஸீஸ் ( வயது 79 ) முடி சூட்டப்படுவார் என்றும்  புதிய இளவரசராக முக்ரின் பொறுப்பேற்பார் என்றும் அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.

தமது அரசாட்சி காலத்தில் அவர் அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் வலுவான உறவை நிலைநட்டினார். சவூதி அரேபியாவில் பெண்கள் வாக்குரிமை  முதன்முறையாக அளிக்கப்பட்டதும் அவரது அரசில்தான்.

மன்னர் அப்துல்லா அமெரிக்காவின் நெருங்கிய நண்பர் என்றும் மத்திய கிழக்கை அமைதிக்கு இட்டிச் செல்ல பல தைரியமான செயல்களை மேற்கொண்டார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய உலகின் மிகப் பெரிய சக்தியாக திகழ்ந்தவர் அப்துல்லாஹ். அவரது துணிவான நடவடிக்கைகளும், கண்ணியமான நட்புறவும் பாராட்டுதலுக்குரியது. மத்திய கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கு ஒரு சக்தியாக அவர் விளங்கினார். அமெரிக்க-சவூதி அரேபிய உறவிற்கு பலமாக திகழ்ந்தவர் அப்துல்லா. அவரது மறைவு வேதனை அளிக்கிறது என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment