நிமால் சிறிபால டி சில்வாவிற்கு எதிராக கட்சிக்குள் கிளர்ச்சி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு கட்சிகள் இவ்வாறு நிமால் சிறிபால டி சில்வாவிற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நிமால் சிறிபால டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு கட்சிகள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மஹஜன கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தக் கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் என்ற அடிப்படையில் தங்களுக்கு விசேட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ. குணசேகர, ஏ.எல்.எம்.அதாவுல்லா, விமல் வீரவன்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இவ்வாறு சபாநாயகரிடம் கோரியுள்ளனர்.
பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். உலகின் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான ஓர் நடைமுறை இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த அரசாங்கங்கள் தமக்கு விசேட பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும் தற்போது அந்தப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவனந்தா சபாநாயகரிடம் கோரியுள்ளார். இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment