Sunday, November 2, 2014

மஹிந்த ராஜபக்ஷவின் 'ஹஜ்' அறிவிப்பை முஸ்லிம்கள் பெரிதாக எடுத்துக் கொண்டார்களா..?

-நஜீப்-

தேர்தல் சீசன் அல்லது தேர்தல் வசந்தம் நெருங்கிக் கொண்டிருப்பதால் நாடும் அது பற்றியே ஆர்வமாக இருக்கின்றது. நாமும் தற்போது அதுபற்றியே அதிகம் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் வருகின்றோம். வரவு செலவுத் திட்டம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் முன்னரே ஜனாதிபதியும் ஆளும் தரப்பினரும் இந்த முறை வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு சலுகைகளை வழங்குகின்ற ஒரு பஜெட்டாக இருக்கும் என்று முன்னறிவித்தல்களைக் கொடுத்திருந்தார்கள்.

கொடுத்திருந்த  முன்னறிவிப்பைப் போன்றே யாரையும் விட்டு விடாமல் எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஜனாதிபதியும் நீதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இந்த முறை வரவு செலவுத் திட்டத்தை மிகவும் உற்சாகமாக வாசித்துக் கொண்டு இடைக்கிடையே ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களை நையான்டி பண்ணிக் கொண்டும் இருந்ததை மக்கள் தொலைக் காட்சி அலைவரிசைகளில் பார்த்து மகிழ்தார்கள்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்ற போது இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட ஒரு வரவு செலவுத்திட்டமல்ல. கடந்த காலங்களில் நாடு பெற்ற வளர்ச்சியின் பங்குகளை நாம் இப்போது மக்களுக்கு வழங்குகின்றோம். ஆனால் இதனை எதிர்க் கட்சிகள் தேர்தலை முன்னோக்கிய வரவு செலவுத் திட்டம் என்று கத்திக் கொண்டிருக்கிறது. 

போர் முடிந்து விட்டது. இதனால் அதற்கு முன்பு போல் பணத்தைக் கொட்ட வேண்டியதில்லை. 
எமது நடவடிக்கைகளினால் விவசாயத்துறை அபிவிருத்தி கண்டிருக்கின்றது. அதன் மூலம் எமது வருவாய் அதிகரித்திருக்கின்றது.

அத்துடன் நாம் நாட்டில் மேற் கொண்ட அபிவிருத்திப் பணிகளில் கனிசமாக தற்போது நிறைவடைந்திருக்கின்றது.எனவே அதற்கு முன்பு போல் பணத்தை வாரி இறைக்க வேண்டியதில்லை.

இதனால்தான் எம்மால் இப்போது மக்களுக்கு இப்படி சலுகைகளை வழங்க முடிந்திருக்கின்றது என்று, வழங்குகின்ற சலுகைகளுக்கு நியாயம் சொல்லப்பட்டது. நல்ல காரணங்கள். நியாயமான வாதங்கள்.

தேர்தல் விஞ்ஞாபனம் என்று தேர்தல் காலங்களில் வெளிவருவதை நாம் பார்த்திருக்கின்றோம். நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் பூராவிலும் ஜனநாயக நாடுகளில் இப்படி ஒரு சம்பிரதாயம் இருக்கின்றது. எனவேதான் சந்திரனிலிருந்து அரசியும், எட்டு கிலோ தனியத்தையும் நமது தலைவர்கள் வாக்காளர்களின் மடிகளில் பிடி என்று கொட்டினார்கள். மடி ஓட்டையாக இருந்ததால் என்னவோ கொட்டிய அரசியையும் காணேம் தானியத்தையும் கானோம். தற்காலத்து இளசுகளுக்கு இதன் அர்த்தம் புரியாது அது பழங் காலத்துக் கதை. காற்றில் பறந்த வாக்குறுதிகள்.

இந்த முறை ஆளும் தரப்பு தேர்தல் விஞ்ஞாபனம் என்று பெரிதாக எதையும் அறிவிக்க வேண்டி இருக்காது என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்றது. நாம் ஏன் இப்படிச் சொல்கின்றோம் என்றால் வரவு செலவுத் திட்டத்தில் எல்லாம் தரப்பட்டு விட்டது. நமது ஜனாதிபதிக்கு நல்ல தாராள மனசு. அவர் இந்த வரவு செலவுத் திட்டத்தில் யாரையும் விட்டு வைத்ததாகத் தெரிய வில்லை. எனவேதன் ஜேவிப் பாராளுமன்ற உறுப்பினர் ஹந்துன் ஹெத்தி இந்த வரவு செலவுத் திட்டத்தை அன்னதானம் என்று கொச்சைப்படுத்தி இருகின்றார்.

நமது ஜனாதிபதி இப்படி சலுகைகளை அள்ளிக் கொட்டும் போது ரணில் என்ன சும்மா இருப்பரா? இருக்கவும் முடியுமா?  அவரும் கடந்த முறை சரத் பொன்சேக்க சொன்னது போன்று  தான் நாட்டின் ஜனாதிபதியானதும் ஊழியர்களுக்கு 10000 ரூபாய்களை வழங்க இருப்பதான அறிவித்திருக்கின்றார். ஆனால் மனிதருக்கு இன்னும் ஒரு பூஜ்யத்தை  கூட்டியே கணக்கைச் சொல்லி இருக்கலாம். நாம் ஏன் இப்படி குறிப்பிகின்றோம் என்பதை நமது வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.!

கடந்த முறை பொன்சேக்க 10000ம் தருவதாக சொன்ன போது தனக்கு அப்படி எல்லாம் பொய்யான வாக்குறுதிகளைத் தர முடியாது தனக்கு 2500 ரூபாய்களைத்தான் தர முடியும் என்று அப்போது வேட்பாளராக இருந்த ராஜபக்ஷவும் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டபடி  இந்தக் கொடுப்பனவு அரச ஊழியர்களுக்குக் கிடைத்ததா என்பதனை அவர்களிடத்தில்தான் கேட்டுப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

எனவே இந்த முறை நவம்பரில் வழக்கமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய வரவு செலவுத் திட்டம் முன்கூட்டியே அக்தோபரில் சமர்ப்பிக்கப் பட்டிருப்பதற்கு அரசு கூறிய விதத்தில் காரணம் சொல்ல வில்லை. எனவே தேர்தலை முன்கூட்டியே இந்த முறை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்க பட்டிருக்கின்றது என்பது தெளிவு. கடந்த வெள்ளிக் கிழமை பாராளு மன்றத்தில் பஜெட் விவாதத்தில் பங்கு கொண்டு உரை நிகழ்திய கரு ஜெயசூரிய மஹிந்த ராஜபக்ஷ அறிவித்த சம்பள அதிகரிப்புக்கள் தொழிலாளர்களை வந்தடைய ஆறு மாதங்கள் ஆகும் என்று தற்போது சொல்லப்படுகின்றது. எனவே பஜெட்டில் சொன்ன நன்மைகள் எதுவும் தேர்தலுக்குப் பின் கிடைக்கப்போவதில்லை இது ஒரு ஏமாற்று வேலை என்று அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ பஜெட்டில் சொன்ன வாக்குறுதிகளை சாதாரண மக்களும் குறிப்பாக ஆளும் தரப்பு ஆதரவு தொழிலாளர்கள் கூட இதனை சந்தேகத்துடன் தான் பார்க்கின்றார்கள். அத்துடன் பஜெட்டில் விவரங்கள் தெளிவில்லாமல் மயக்க நிலையில் இருக்கின்றது. வாழ்கைச் செலவுப்படி அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்கப்படுகின்றது என்று சொல்லப்பட்டாலும் அதில் எந்தத் தொகை சேர்க்கப்படும் என்று தமக்கு கூற முடியாது அது பற்றிய சுற்றறிக்கைகள் வந்த பினர்தான்  தம்மால் இது பற்றி உறுதியாகக் கூற முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றார்கள்.

ஊவாத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டணக குறைப்பு இன்று வரை மக்களுக்குப் போய்ச் சேர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் தனது வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி இதனை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். 

வரலாற்றில் முதல் முறையாக உலக நாடு ஒன்றில் வாழ்கின்ற எல்லா முஸ்லிம்களையும் புனித மக்காவுக்கு நமது ஜனாதிபதி அனுப்பிவைக்கப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களின் மீது அரசுக்கு இருக்கின்ற அதிர்ப்தியை கலைவதற்கு இந்த அறிவிப்பை ராஜபக்ஷ செய்திருக்க வேண்டும் என்று கருத வேண்டி இருக்கின்றது. 

ராஜபக்ஷவின் இந்த அறிவிப்பை முஸ்லிம் மக்கள் பெரிதாக எடுதுக் கொள்ளவில்லை. முஸ்லிம்களின் ஹஜ் பயணம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு சில ஒழுங்கு முறைகள் விதிகள் இருக்கின்றது. அத்துடன் முஸ்லிம்கள் எல்லோருக்கும் ஹஜ் கடமையுமில்லை. ஜனாதிபதிக்கு இந்த ஆலோசனையை வழங்கிய தாரள மனசுக்காரர் யாரோ?

முஸ்லிம்களை மட்டும் 4 அல்லது 5 இலட்சம் செலவு செய்து ஹஜ்ஜூக்கு அனுப்பிவைதத்தால் போதுமா? என்ன இது பௌத்த நாடு பொதுபல சேனாக்காரகள் குறிப்பாக  ஞானத்தார் தம்முடைய ஆட்களை தம்பதிவாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று போராடமல் இருப்பாரா. ஆனால் அதிசயம் என்ன வென்றால் இந்த அறிவிப்புக்குறித்து மனிதன் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார். ஒரு வேலை இந்த ஐடியாவை ஜனாதிபதிக்கு கொடுத்தவரே அவராக இருக்குமோ என்று ஒரு சந்தேகம். அவர் இது விடயத்தில் அமைதியாக இருப்பதால் தான் நாம் இப்படி யோசிக்கின்றோம்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக் குறித்து ஒரு முஸ்லிம் அமைச்சரிடத்தில் கேட்டால் அதைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள் ஆளை விடுங்கள் என்று நிற்கின்றார் அவர். எனவே எதற்கும் முஸ்லிம்கள் பாஸ்போர்ட்டுக்களை எடுத்துக் கையில் வைத்திருப்பது நல்லது. எப்போது பயணத்திற்கு அழைப்போ என்னவே  தெரியாதே! 

இந்த முறை ஆளும் தரப்பு குறிப்பாக ராஜபக்ஷ பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்ற தெணிப் பொருளில் தமது பரப்புறைகளைத் தற்போது துவக்கி இருக்கின்றது. ராஜபக்கஷ பெற்றெடுத்த  சுதந்திரம் என்பது பிரபாகரனிடமிருந்து நாட்டை முற்றாக விடுதலை செய்து கொண்ட நிகழ்வைத்தான் அவர்கள் இப்படி உச்சரிக்கின்றார்கள். எனவே இந்த நாட்டில் அண்மைக் காலத்திலும் அதாவது 2009 வரையிலும் இங்கு இரண்டு அரசுகள் இருந்திருக்கின்றது என்பதனை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. எனவே வரலாறு பிரபாகரனை ஒரு தேசத்தின் தலைவரான அங்கிகரத்துவிடுமோ என்னவோ தெரியாது?

இதற்கிடையில் இலங்கையின் தேர்தல் திணைக்களத்தின் சுயாதீனத் தன்மை குறித்து தமக்குத் திருப்தி இல்லாத நிலை காணப்படுவதாக பொது நலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்ம குறிப்பிட்டு ஆளும் தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றார். அதே போன்று நாம் கடந்த வாரம் குறிப்பிட்டது போன்று பாப்பாண்டவர் பிரன்சிஸ் அவர்களின் வருகை தற்போது  கேள்விக்குறியாக இருக்கின்றது என்று தெரிய வருகின்றது. ஜாதகக்காரர்கள் கொடுத்த திகதியில் தேர்தலை நடாத்துவதில்தான் ஆளும் தரப்பு ஆர்வமாக இருக்கின்றது.

இதற்கிடையில் தற்போதய பிரதமர் தி.மு. ஜெயரத்ன ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் அதிகரிக் வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றார். இப்படி ஜனாதிபதியை சந்தேஷப்படுத்தி அவர் தனது பதிவியை உறுதிப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கி இருக்கின்றார்.அத்துடன் தான்நல்ல உடலரேக்கியத்துடன்இருப்பதாவும் அவர் குறிப்பிடுகின்றார். 

இதற்கிடையில் அமைச்சர் மைத்திரிபால சிரிசேனா பிரதமர் பதவியிலுள்ள ஆர்வத்தை தற்போது பகிரங்கமாக வெளிக்காட்டி கூட்டங்களிலும் ஊடகச் சந்திப்புக்களிலும் கருத்துக் கூறி வருகின்றார். அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் சஜித்துக்கு தான் வெற்றி பெற்றால் பிரதமர் பதவி என்று கூறுவது ரணிலின்  மற்றுமொரு அரசியல் நகைச்சுவை மட்டுமே. அபூர்வமாக ரணில் வெற்றி பெற்று விட்டாலும் ஒரு போதும் சஜித்துக்கு பிரதமர் பதவி கிடைக்கப் போவதில்லை என்பது எமது கருத்து.

எனவே மஹிநத் ராஜபக்ஷ மூன்றாவது முறையும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் 2015 பஜெட்டில் சொல்லப்பட்ட சலுகைகளை மக்களுக்கு இந்த முறையும் கொடுக்காது ஏமாற்றி விடுவாரேயானால் அவரது அரசியல் எதிர்காலம்  நெருக்கடிகளுக்கு இலக்காகும் என்பது உறுதி.

இதற்கிடையில் தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொள்வதில் ஆளும் தரப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வமில்லாது இருப்பதால் நிகழ்ச்சி நிரலுக்கு முன்கூட்டியே பாராளுமன்றம் கூடிக் கலைந்து கொண்டிருக்கின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சி சொல்கின்ற படி இந்த வரவு செலவுத் திட்டத்தில் சொல்கின்ற படி எதுவும் நடக்கப்போவதில்லை என்றால் பாராளுமன்ற விவாதங்களில் கலந்த அது பற்றி மக்களுக்குத் தமது கருத்துக்களைச் சொல்ல முடியும். ஆனால் அவர்களே இதில் ஆர்வம் இல்லாமல் நடந்து அரசுக்கு துணை போய்க் கொண்டிருக்கின்றறார்கள்.

வருகின்ற வரவு செலவுத் திட்ட வாக்கொடுப்பின் போது ஹெல உறுமய வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்காது ராஜபக்ஷவுக்கு நெருக்கடியைக்  கொடுக்க முனைகின்றது. இதற்கிடையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபே அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஆகியோர் ஹெல உறுமயக் கட்சிக்காரர்களுடன் சமாதனப் பேச்சுக்களை மேற் கொண்டு வருவதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது. ஜனாதிபதியும் ஹெல உறுமய தலைவர்களைச் சந்தித்த போது நடந்து முறை குறித்து வருத்தம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. 
  

No comments:

Post a Comment