Sunday, November 2, 2014

மோசடிகளுக்குப் பிரசித்தி பெற்ற இந்நாட்டில் - அனுரகுமார திசாநாயக்க


ஊழல் மோசடிகள் மலிந்து கிடக்கின்ற இந்நாட்டில் பொருளாதார மற்றும் கடன் சுமைகள் மக்களின் மீதே ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் காங்கேசன் துறையிலும் எம்பிலிப்பிட்டியவிலும் ஜனாதிபதிக்கென மாளிகைகள் அவசியமா என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பியும் ஜே.வி.பி. தலைவருமான அனுர குமார திசா நாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டதின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறுகையில்,

புதியதோர் பரம்பரையை இலக்காகக் கொண்டு அதாவது ராஜபக்ஷ என்ற அதிகாரம் நிரம்பப் பெற்ற ஒரு பரம்பரையை மையமாகக் கொண்டே  2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தோரணம் கட்டி மின்குமிழ்களைத் தொங்கவிட்டு அழகுபடுத்தப்பட்டிருப்பதைப் போன்று மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளாத சிந்திக்கத்தவறிய தான்தோன்றித்தனமான வரவு செலவுத் திட்டமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

குறுகிய எண்ணக்கருவுடனான இத்திட்டம் தொடர்பில் நாம் அதிசயிக்கவும் இல்லை. அலட்டிக் கொள்ளவும் இல்லை.

ஸ்ரீ லங்கன் எயார் லைன் விமான சேவை நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் இன்று ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபா  நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எனினும் இந்த நிறுவனங்களைக் கொண்டு நடத்துவதற்கென கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு கடனாக வழங்க அந்த சுமையை மக்களின் மீது வரியாக சுமத்தியிருக்கின்றது.

போதைப்பொருட்களை உற்பத்தி செய்கின்ற அல்லது விநியோகம் செய்கின்ற நாடாக இலங்கை மாற்றம் பெற்றிருக்கிறது. போதைப் பொருள் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் அதன் பிரதானிகள் மாயமாகின்றனர். அவர்களைப்பிடிக்க முடியாத நிலைமை உருவாகியிருக்கின்றது.

உற்பத்தி துறையினைப் பொறுத்தவரையில் இலங்கையை உலக நாடுகளுடன் ஒப்பிட்டு அல்லது சமப்படுத்தக்கூற முடியாதிருக்கின்றது.

அமெரிக்கா என்றதும் கோதுமை ஞாபகத்திற்கு வருகின்றது. பாகிஸ்தான் என்றால் அரிசி ஞாபகத்திற்கு வருகிறது. இன்னும் பல நாடுகளைக் கூற முடியும். ஆனால் இலங்கை என்றதும் எமது நாட்டுப் பெண்களை  பணி பெண்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற நாடாக பெயர் பெற்றிருக்கிறது.

இலங்கையிலிருந்து இன்று வெளிநாடுகளில் பணிப்பெண்களாக தொழில் புரிந்து வரும் பெண்களே தற்போது அதிகமான அந்நிய வருமானத்தை ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மோசடிகளுக்குப் பிரசித்தி பெற்ற இந்நாட்டில் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் போக்குவரத்துக்கென 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நான்கு  வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கான பாலுணவைப் பெற்றுக் கொடுப்பதற்கு வெறும் 200 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இந்நாட்டில் நான்கு வயதுக்கும் குறைவான 14 இலட்சம் சிறுவர்கள் உள்ளனர். பத்து இலட்சம் சிறுவர்களுக்கு பாலுணவு கொடுக்க வேண்டுமானால் சாதாரண செலவில் 260 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. ஆனால் 14 இலட்சம் சிறுவர்கள் உள்ளனர். இவர்களுக்கு 200  மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று அரசில் உள்ளவர்களில் 28பேரின் கோப்புகள் அதாவது ஊழல் கோப்புகள் இருக்கின்றன. இந்த கோப்புகளுடன் தொடர்புடையவர்களே இன்று அரசின் அடிவருடிகளாக இருக்கின்றனர்.

மேலும் அரசின் சில வகுப்பினர் உயர் ரக சப்பாத்துக்களை அணிகின்றனர். ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான சப்பாத்துக்களை அணிவோரும் உள்ளனர். அதேபோன்று ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ?????????  காரை பிறந்தநாள் பரிசாகவும் வழங்குகின்றனர்.

ஆனாலும் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் சப்பாத்துக்கள் இல்லை என்ற காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் பட்டினி தாங்காது ஆற்றில் குதித்து சாகும் நிலையும் இங்கு தான் இருக்கின்றது.

ஜனாதிபதிக்கென கண்டியிலும் நுவரெலியாவிலும் மஹியங்கனையிலும் மற்றும் எம்பிலிப்பிட்டியவிலும் மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜனாதிபதி செல்கின்ற போது மூன்று ஹெலிகொப்டர்கள் செல்கின்றன.
அரை மணி நேரத்தில் அல்லது 40 நிமிடங்களில் செல்கின்ற பிரதேசங்களில் ஏன் ஜனாதிபதி மாளிகைகள் இருக்க வேண்டும். இங்கு எல்லாமே ஊழல்களால் நிறைந்துள்ளன. எனவே இந்த வரவு செலவுத் திட்டமும் ஊழல் மிக்கது என்பதால் இது எதிர்க்கப்பட வேண்டும் என்றார். 

No comments:

Post a Comment