Saturday, October 25, 2014

'கடும்போக்குவாதத்தை கட்டுப்படுத்த தவறினால், பிராந்திய வலயமே பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கலாம்'

-Gtn-

கடும்போக்குவாத நடவடிக்கைகள் சிறுபான்மை சமூகங்களை மிகவும் மோசமான வகையில் பாதிக்கும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் ஊடகமொன்றுக்கு செவ்வியளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடும்போக்குவாதம் குறித்த பிரச்சினைகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமெனவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக முஸ்லிம் சமூகம் கடும்போக்குவாதிகளினால் அச்சறுத்தல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குரோத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சுக்கள் பிரச்சாரங்கள் நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடுமென குறிப்பிட்டுள்ளார்.

குரோத உணர்வு மற்றும் கடும்போக்குவாதம் தொடர்பில் தொடர்ச்சியாக நெகிழ்வுப் போக்கு காட்டப்பட்டு வருவதாகவும் இது ஓர் ஆரோக்கியமான நிலைமை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக சிறுபான்மை சமூகம் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்கள் அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

கடும்போக்குவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் பிராந்திய வலயமே பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment