(நன்றி - எம்.எல்.எம். அன்ஸார்)
1990 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பேரவலத்தை சந்தித்து பெருமச்சத்தில் உறைந்திருந்த ஆண்டாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக அதி உச்ச வன்முறைகள் நிகழ்த்தப்பட்டது இந்த ஆண்டில்தான்.
முஸ்லிம் ஊர்களுக்குள் புகுந்து சுட்டுத்தள்ளியது, பள்ளிவாயல்களுக்குள் கொலைகளை நிகழ்த்தியது, உடைமைகளைச் சூறையாடியது, கடத்திக் கொன்றது என்பவற்றுடன் வட மாகாண முஸ்லிம்களை ஒரு நாள் அவகாசத்தில் உடுத்த உடுப்போடு விரட்டி அடித்ததும் 1990 ஆம் ஆண்டில்தான்.
எனது வாப்பா மஹ்மூது லெப்பை. சீயன்னா என்று அவரது நண்பர்களாலும் குடும்பத்தினராலும் அழைக்கப்பட்டவர். 1970 ஆம் ஆண்டு வரை ஏறாவூரில் Eastern Hardware என்ற பெயரில் (தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையம் இருக்கும் இடம்) கடை வைத்து இரும்பு வியாபாரம் செய்து வந்தார். வாப்பா நல்ல பணக்காரர். செல்வச்செழிப்போடு வாழ்ந்து வந்தோம்.
1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் இடம்பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஸ்ரீமாவோ பண்டாரநாயக தலைமையிலான ஸ்ரீ. ல. சு. கட்சி ஆட்சியைப் பிடித்ததும் ஏறாவூரில் இடம்பெற்ற வன்முறைகளின் போது ரகுமான் மாஸ்டர் என்பவரின் தலைமையிலான குழுவினர் காத்தான்குடியைச் சேர்ந்த எனது வாப்பாவின் கடையை தீ வைத்து எரித்து விட்டனர்.
அப்போது வாப்பா ஊரில் இருந்தார். கேட்கப் பார்க்க ஆள் இல்லாததால் கடை எரிந்து இரும்பெல்லாம் ஒன்றுக்குமே உதவாததாகிவிட்டது. தகவல் கிடைத்து ஏறாவூருக்குப் போய் வாப்பா பார்த்த போது கடையிலிருந்து உருப்படியாக எடுப்பதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. எரிந்த நிலையில் காணப்பட்ட இரும்புப் பொருட்களை அள்ளிக் கொண்டு ஊருக்கு வந்துவிட்டார்.
இதன் பிறகு வாப்பாவுக்கு மூலதனப் பிரச்சினை ஏற்பட்டது. தொழில் ஒன்றை உருவாக்கிக் கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிகொண்டார். 1980 ஆம் ஆண்டுவரை வாப்பாவால் நிரந்தரமான ஒரு தொழிலை செய்ய முடியாமலேயே இருந்தது.
நானும் தங்கச்சியும் படித்துக் கொண்டிருந்தோம். குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல். வாப்பாவின் வருமானம் போதாதிருந்ததால், உம்மா பாய் இழைத்து விற்று குடும்பத்தைக் காப்பாத்தினா.
இக்காலப்பகுதியில் வாப்பாவுக்கு கடுமையான மூலவியாதி ஏற்பட்டுவிட்டது. உட்கார்ந்திருக்க முடியாத நிலை. சில கடைகளில் சம்பளத்திற்கு வேலை பார்த்தார். வருமானம் போதுமானதாக இருக்கவில்லை.
உறவினர் ஒருவரின் ஆலோசனைப்படி பொட்டணி வியாபாரம் செய்யத் தொடங்கினார். கிரான் வாரச் சந்தையிலும் ஆயித்தியமலை. கரடியனாறு, வேப்பவெட்டுவான் போன்ற இடங்களுக்கு சைக்கிளில் புடவை சாமான்களை எடுத்துச் சென்றும் விற்று வந்தார். ஓரளவுக்கு இத்தொழில் சாத்தியமாக அமைந்த போதிலும் பின்னர் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் இனக்கலவரங்களால் தமிழ்ப் பகுதிகளுக்குள் முஸ்லிம்களால் செல்லமுடியாத நிலை உருவாகவே அத்தொழிலையும் கைவிட வேண்டிய நிலை வாப்பாவுக்கு ஏற்பட்டது.
இதன் பின்னர் கொழும்பிலுள்ள இரண்டு லொட்ஜ்களில் உதவியாளராக வேலை செய்தார். இச் சந்தர்ப்பத்தில் வாப்பாவின் நண்பர் ஒருவர் அழைத்ததன் பேரில் 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தனது பழைய புடவைத்தொழிலை தொடங்குவதற்காக யாழ்ப்பாணம் சென்றார்.
தொழிலுக்கு நல்ல சாதகமான சூழல் அக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்ததால் வாப்பாவும் அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். நல்ல உழைப்பு, நல்ல வருமானம். வீட்டுச் செலவுக்குத் தேவையான அளவான பணம், மற்றும் சாமான்கள் மாதம் தோறும் வாப்பா அனுப்பிக் கொண்டே இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்த மூன்று வருடங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான முதலை வாப்பா தேடிக்கொண்டார். சொந்தமாக ஒரு சைக்கிள். மூர் வீதி பள்ளி வாயலில் தங்குவதற்கான அறை.
இப்போது 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம். யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்திலுள்ள மொத்த முஸ்லிம்களையும் ஒரு நாள் அவகாசத்தில் அங்கிருந்து வெளியேறி விடும்படி விடுதலைப் புலிகள் விரட்டி அடிக்கிறார்கள். பணம், பொருள் எதையுமே எடுத்துச் செல்வதற்கு புலிகள் அனுமதிக்க வில்லை. உடுத்த உடுப்போடு ஓடிவிடும்படி அடித்துத் துரத்துகிறார்கள்.
வாப்பா தான் வைத்திருந்த சைக்கிளை யாழ்ப்பாணத்தில் உள்ள தெரிந்த ஒருவரிடமும், வியாபார பொருட்களை இன்னொருவர் வீட்டிலும் ஒப்படைத்துவிட்டு காத்தான்குடிக்கு புறப்பட்டு வருகிறார். முந்தைய நாட்களில் வியாபாரம் செய்து வைத்திருந்த அறுபத்தைந்தாயிரம் ரூபா பணம், எனக்கொரு சாரன், தங்கச்சிக்கொரு சட்டை, உம்மாவுக்கு செருப்பு ஒரு சோடி ஆகியவற்றுடன் கருவாடு ஒரு கிலோவும் மட்டும் எடுத்துக் கொண்டு வருகிறார்.
நடந்தும், அகப்படுகிற வாகனங்களில் ஏறிக் கொண்டும் பல சிரமங்களை எதிர்கொண்டு ஓமந்தைக்கு வாப்பா மற்றும் வாப்பாவின் தொழில் நண்பர்கள் ஆகியோர் வந்து சேர்கின்றனர். அங்கே வெளியேறிச் செல்லும் முஸ்லிம்களைக் காத்து நிற்கும் விடுதலைப் புலிகள், ஒவ்வொருவரையும் கடுமையாகச் சோதனை இடுகின்றனர். அனைவரிடமிருந்தும் பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன. வாப்பாவிடமிருந்த 65,000 ரூபா பணத்துடன் சாரன், சட்டை, செருப்பு, கருவாடு என்பனவும் கொள்ளையடிக்கப் படுகின்றன. சாரன், சட்டைகளை மாத்திரமாவது தந்துவிடுங்கள் என்று வாப்பா கெஞ்சிக்கேட்டும் புலிகள் இரங்கவில்லை. வெறுங்கையோடு வீடுவந்து சேர்கிறார்.
இதன்பிறகு வாப்பா உடல் உள ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டு வைத்தியசாலை, மருந்து மாத்திரைகள் என்றே காலத்தைக் கழித்தார். வீட்டில் சும்மா இருக்க முடியாது என்பதற்காக குலபா உர் ராசிதீன், ஹிழுறியா தைக்கா, ஸாவியா தைக்கா ஆகிய மஸ்ஜித்களில் முஅத்தினாக கடமையாற்றினார். இக்காலப் பகுதியில் நரம்புத் தளர்ச்சி நோய் அவருக்கு ஏற்பட்டது. அடிக்கடி மயங்கி விழத் தொடங்கினார். முஅத்தின் பணியும் செய்ய முடியாமல் போனது.
திடீரென ஒரு நாள் ஏற்பட்ட தளர்ச்சி நோயினால் இரு கால்கள், நா முற்றாக இயங்காமல் போய் விட்டன. படுத்த படுக்கையாகி விட்டார். அதோடு சேர்த்து நீரிழிவு நோயும் தாக்கவே 2010 ஆம் ஆண்டு நானும் ஊரில் இல்லாத ஒருநாள் காலை, உம்மாவும், தங்கச்சியும் மட்டும் பக்கத்தில் இருக்க வபாத்தாகிவிட்டார்.
No comments:
Post a Comment