Saturday, October 25, 2014

சர்வதேச எதிர்ப்பையும் மீறி, பெண்ணை தூக்கிலிட்டது ஈரான்


ஈரானில் உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 வயது இளம் பெண், சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.

ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது மரண தண்டனையை நிறைவேற்ற உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்பு எழுந்திருந்த நிலையிலும், அதனைப் பொருள்படுத்தாமல் ஈரான் அவரைத் தூக்கிலிட்டது.

ரேஹானே ஜபாரி என்ற அந்தப் பெண், சனிக்கிழமை அதிகாலையில் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் சட்ட அமலாக்க அலுவலகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ. தெரிவித்துள்ளது.

தூக்கிலிருந்து ரேஹானேவைக் காப்பாற்றுவதற்காக இயங்கி வந்த ஃபேஸ்புக் இணையதளப் பக்கத்தில், "அவரது ஆன்மா சாந்தியடையட்டும்' என்ற வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், அவர் தூக்கிலிடப்பட்ட தகவல் உறுதியாகியுள்ளது.

வீடுகளின் உள்ளலங்கார நிபுணரான ரேஹானே, கடந்த 2007-ஆம் மோர்தெஸா அப்துலாலி சர்பண்டி என்ற உளவுத் துறை அதிகாரியை கத்தியால் குத்திக் கொன்றதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், ரேஹானேவை பாலியல் பலாத்காரம் செய்ய அப்துலாலி முயன்றதாகவும், தற்காப்புக்காகத்தான் அவரை ரேஹானே குத்தியதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறிய மனித உரிமை அமைப்புகள், ரேஹானேவுக்கான மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

ஈரானின் திரைப்பட நடிகர்கள் உள்பட பிரபலங்கள் பலரும் ரேஹானேவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தனர். குத்திக் கொல்லப்பட்ட அப்துலாலியின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கியிருந்தால், ஈரான் நாட்டு இஸ்லாமியச் சட்டப்படி ரேஹானே தூக்கிலிருந்து தப்பியிருப்பார்.

எனினும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் மர்ம நபர் ஒருவர் இருந்ததாகவும், அந்த நபரைப் பற்றிய உண்மைகளை மூடி மறைக்கும்வரை ரேஹானேவுக்கு மன்னிப்பு வழங்க முடியாது எனவும் கூறி, அப்துலாலி குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டனர்.

இந்தச் சூழலில், ரேஹானேவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டு மட்டும் ஈரானில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment