Sunday, October 26, 2014

பயிற்சியில் ஈடுபட முடியவில்லை - மாத்யூஸ்

‘‘இந்திய தொடருக்கென பிரத்யேகமாக தயாராகவில்லை. உடற்தகுதியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம்,’’ என, இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் தெரிவித்தார்.      

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி பாதியில் விலகியது. இதனையடுத்து இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டியில் விளையாட சம்மதித்தது. முதல் போட்டி வரும் நவ., 2ல் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது.     

இத்தொடர் குறித்து இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் கூறியது: இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு சிறப்பான முறையில் தயாராக முடியவில்லை. மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. இருப்பினும் எங்களால் முடிந்த வரை தயாராகி வருகிறோம்.      

ஐ.சி.சி., அட்டவணைப்படி முன்னதாக வேறு எந்த தொடரும் இல்லாததால், அடுத்து வரவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக தயாராகி வந்தோம். இதனால் உடற்தகுதியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினோம். திடீரென இந்திய பயணம் அமைந்ததால், கடந்த மூன்று நாட்களுக்கு முன் தான், பேட்டிங் பயிற்சியை துவக்கினோம்.     

எங்கள் அணியின் அனுபவ வீரர் சங்ககராவின் முதுகுப் பகுதியில் வலி இருப்பதால், இந்திய தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. இவர், இந்திய பயணத்துக்கு முன் குணமாகிவிடுவார் என நம்புகிறேன். ஒருவேளை அவரால் பங்கேற்க முடியாத பட்சத்தில், இளம் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லா விளையாடுவார்.     

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கேப்டன் தோனி விளங்குகிறார். இவர், முதல் மூன்று போட்டியில் விளையாடாதது எங்களுக்கு சாதகமான விஷயம். ஆனால் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். முந்தைய பயணத்தின் போது இந்தியாவில் மோசமான தோல்வி பெற்றதை மறக்க முடியாது. கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராத் கோஹ்லி, மிகச் சிறந்த வீரர் என்பதால், அணியை திறமையாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறேன்.      
இவ்வாறு மாத்யூஸ் கூறினார்.

No comments:

Post a Comment